Print Sermon

இந்த வலைதளத்தின் நோக்கம் உலக முழுதிலும் வேதாகம பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ள, மூன்றாம் உலகத்தில் உள்ள போதகர்கள் மற்றும் அருட்பணியாளர்களுக்கு, போதனைகளின் மூலப்பிரதிகள் மற்றும் போதனை வீடியோக்களை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்தச் செய்திப் பிரதிகளும் வீடியோக்களும் 1,500,000 கணினிகளில் 221 நாடுகளில் www.sermonsfortheworld.com என்னும் வலைதளம் வழியாகச் செல்லுகிறது. நூற்றுக்கணக்கானோர் வீடியோக்களை யூ ட்யூப் வழியாக பார்வையிடுகின்றனர், பிறகு யூ ட்யூப் விட்டு வெளியேறி எங்களது இணையதளத்துக்கு அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். யூ ட்யூப் எங்களது இணையதளத்துக்கு மக்களைக் கொண்டுசேர்க்கிறது. இந்தச் செய்திப் பிரதிகள் 46 மொழிகளில் 120,000 கணினிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது. இந்தச் செய்திப்பிரதிகள் காப்புரிமை பெறப்படவில்லை, ஆகையால் பிரசங்கியர்கள் இவற்றை அனுமதியில்லாமல் உபயோகிக்கலாம். முழு உலகிற்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கும் இந்த மகத்தான சேவைக்கு உங்கள் மாதாந்தர நன்கொடை செய்து உதவிட தயவாய் இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்கள் டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு எழுதும் போது நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுங்கள், இல்லையேல் அவரால் உங்களுக்குப் பதில் அளிக்க இயலாது. டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் மின் அஞ்சல் rlhymersjr@sbcglobal.net என்பதாகும்.




கிறிஸ்துவின் அடக்கத்தின் முரண்பாடு

(பிரசங்க எண் 10 ஏசாயா 53ன் மீதானது)
THE PARADOX OF CHRIST’S BURIAL
(SERMON NUMBER 10 ON ISAIAH 53)
(Tamil)

அறிவர் R. L. ஹைமர்ஸ் ஜுனியர் அவர்களால்

2013ம் ஆண்டு ஏப்ரல் 7 அன்று லாஸ் ஏஞ்சலஸிலுள்ள பாப்திஸ்து ஆசரிப்புக் கூடாரத்தின் கர்த்தருடைள நாள் மாலை ஆராதனையில் பிரசங்கிக்கப்பட்டது.
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, April 7, 2013

“துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை, அவரது வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை” (ஏசாயா 53:9).


இயேசு கிறிஸ்துவின் அடக்கம் குறித்து இதுவரை எத்தனை பிரசங்கங்களை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்? நான் இதுவரை ஒரு பிரசங்கம் கூட கேட்கவில்லை. 55 ஆண்டுகளாக நான் பிரசங்கித்து வந்தும் 59 ஆண்டுகளாக திருச்சபை பணியில் இருந்தபோதும் கிறிஸ்துவின் அடக்கத்தைக் குறித்த ஒரு பிரசங்கத்தை நூலில் படித்த ஞாபகம் கூட எனக்கு இல்லை! இன்னும் அதிகமானதை நாம் கேட்டிருக்க வேண்டும். அவரது அடக்கம் ஒன்றும் முக்கியமற்றது அன்று. உண்மையைச் சொல்லப்போனால், சுவிசேஷத்தின் இரண்டாவது குறிப்பாக அது உள்ளது!

“கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்தார்” (I கொரிந்தியர் 15:3).

இதுதான் சுவிசேஷத்தின் முதல் குறிப்பு.

“அடக்கம் பண்ணப்பட்டார்” (I கொரிந்தியர் 15:4).

இது சவிசேஷத்தின் இரண்டாவது குறிப்பு.

சுவிசேஷத்தின் இரண்டாவது குறிப்பை ஒருபோதும் குறிப்பிவில்லையென்றால், சுவிசேஷத்தை நாம் அறிவிக்கிறோமென எப்படிக் கூறலாம்? ஆனால் இந்நாட்களில் முதலாவது அல்லது மூன்றாவது குறிப்புகளை குவிமையமாய்க் கொண்ட சில முழுமை நலன்மிக்க பிரசங்கங்களும் இருக்கின்றன! நவீனகால பிரசங்கித்தலின் பெரிய பலவீனங்களில் இதுவும் ஒன்று. சுவிசேஷத்தை நாம் மையமாய்க் கொள்ள வேண்டும். கிறிஸ்துவிற்கு மேலான கனத்தை அளித்து, நமது பிரசங்கித்தலில் அவருக்கும் அவரது பாவ பரிகார கிரியைக்கும் மிகுந்த முக்கியத்துவத்தைக் கொடுக்க வேண்டும்.

இந்நாட்களில் தரமான பிரசங்கங்கள் மிகக் குறைவே எனப் பலரும் புலம்புகின்றனர். இதை நான் முற்றிலும் ஆமோதிக்கிறேன். நல்ல பிரசங்கங்கள் இன்று மிகவும் சொற்பமே. இது ஏன் இப்படி இருக்கிறது? பெரும்பாலும் மிகக் குறைவான சுவிசேஷப் பிரசங்கித்தல் இருப்பதால்தான் இந்நிலை. அழிவை நோக்கி ஓடும் மக்களால் தங்களது சபை நிரம்பி வழிந்தாலும், அழிவோருக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கியாமல், போதகர்கள் “கிறிஸ்தவர்களுக்குப்” போதிப்பதில் மும்முரமாயிருக்கிறார்கள்! கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்படும் “அறநெறி போதனைகள்” சிறந்த பிரசங்கித்தலாக ஒருபோதும் கருத முடியாது. கிறிஸ்துவானவரை மையப்படுத்தாத பிரசங்கம் உண்மையிலேயே சிறந்த பிரசங்கமாகாது!

சுவிசேஷத்தைப் பற்றிய அறிவென்பது கிறிஸ்துவைப் பற்றிய சில தகவல்களை அறிந்திருப்பதைவிட மிகவும் மேலானது. சுவிசேஷத்தை உண்மையாக அறிந்திருப்பதென்பது கிறிஸ்துவானவரை அறிந்திருப்பதே. இயேசு சொன்னார்,

ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்” (யோவான் 17:3).

இங்கு ‘அறிவது' என குறிப்பிடப்படுவதின் அர்த்தம் ‘அனுபவத்தால் அறிந்துகொள்வது' என்பதென ஜார்ஜ் பேக்கர் பெர்ரி கூறுகிறார் (கிரேக்க-ஆங்கில புதிய ஏற்பாட்டு சொல்லகராதி). நீங்கள் உண்மையான கிறிஸ்தவனாய் இருக்க வேண்டுமானால் கிறிஸ்துவை அனுபவத்தில் அறிந்திருக்க வேண்டும். வெரும் சில தகவல்களை அறிந்திருப்பது உங்களை இரட்சிக்காது. நமது பாவங்களுக்காக அவர் மரித்ததை நீங்கள் அனுபவமாய் அறிந்திருக்க வேண்டும். அவரது அடக்கத்தை அனுபவத்தில் அறிந்திருக்க வேண்டும். அவரது உயிர்த்தெழுதலை அனுபவமாய் அறிந்திருக்க வேண்டும். இதுவே இரட்சிப்புக்கான மார்க்கம். இதுதான் நித்திய ஜீவனுக்கு வழி.

ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்” (யோவான் 17:3).

இந்த அனுபவங்களை நீங்கள் பெற்றிருக்கவில்லையென்றால், நான் கூறியவை உங்களுக்கு சற்று சிரமமாய்த் தோன்றலாம். நீங்கள் மனமாற்றத்தை அனுபவிக்காதவரை உங்களை உண்மைக் கிறிஸ்தவர் எனக் கூற இயலாது. நீங்கள் மனதில் மாற்றம் அடையும் வரை சில கஷ்டங்களும் சிரமங்களும் உங்களுக்கு வருகிறது. இயேசுவின் பாதத்தில் விழுந்து அவரில் மட்டுமே உண்மையான இரட்சிப்பை நீங்கள் கண்டு கொள்ளலாம்.

கிறிஸ்துவை அறியும்படி நீங்கள் சிலுவையண்டை சென்று, நமது பாவங்களுக்கு பரிகாரம் தேட சிலுவையிலறையப்பட்ட அவரை விசுவாசத்துடன் நோக்கிப் பார்க்க வேண்டும். மேலும் விசுவாசத்தோடு கிறிஸ்துவின் கல்லறைக்குள் நீங்கள் இறங்கிச் செல்ல வேண்டும்.

“அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம் பண்ணப்பட்டோம்” (ரோமர் 6:4a),

ஏனெனில் அவரோடு மரிப்பதில்தான் “ புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்து கொள்ளும்படிக்கு” நாம் எழும்புகிறோம் (ரோமர் 6:4b).

ஆனபடியால், அவரோடு நாமும் அதை அனுபவிக்கும்படி நமது வேதபாடப் பகுதியிலுள்ள அவரது அடக்கம் பண்ணுதலுக்குத் திரும்புவோமாக.

“துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை, அவரது வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை” (ஏசாயா 53:9).

இந்த வசனத்தில் கிறிஸ்துவின் அடக்கத்தின் முரண்பாட்டையும், அதன் ஒவ்வாதத் தன்மையும் அதன் புதிரான நிலையையும் காண்கிறோம். பின்பு இந்தப் புதிரின் பதிலை நாம் கண்டு கொள்கிறோம்.

I. முதலாவதாக, அவரது அடக்கத்தின் முரண்படு மெய்மை.

“துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார் …” (ஏசாயா 53:9).

இயேசுவானவரின் காலத்தில், “ துன்மார்க்கர்” என்பது கொடுங்குற்றம் செய்தோரைக் குறிக்கும் சொல். “ ஐசுவரியவான்” என்பவர்கள் கனத்திற்குரியோராயிருந்தனர். அப்படியானால் ஒரே சமயத்தில் எப்படி அவர் கல்லறையில் துன்மார்க்கரோடும் மரணத்தில் ஐசுவரியவான்களோடும் இருக்க முடியும்? இது பண்டைக் கால யூத வேதவியாக்கினிகளை மிகவும் குழப்பியது. அவர்களது மனங்களைப் பொறுத்தவரையில் இது ஒரு முரண்பாடு, பொருந்தி வராத ஒன்று.

ஆனால் இந்த விடுகதை யோவான் சுவிசேஷத்தில் விடுவிக்கப்படுகிறது. இரண்டு கள்வர்கள் நடுவில், அவரது வலது பக்கத்தில் ஒருவன் அவரது இடது பக்கத்தில் ஒருவன், இயேசு சிலுவையில் மரித்தார். நமது வேத வசனப் பகுதியில் 'துன்மார்க்கர்' எனக் குறிப்பிடப்படுகிறவர்கள் இவர்களே. இயேசு முதலாவது மரித்தார், அவ்விரு கள்வர்களும் இன்னும் சற்று நேரம் உயிரோடிருந்தனர்.

“நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்த நாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப் போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள்” (யோவான் 19:31).

போர்ச்சேவகர்கள் அவ்விரு கள்வர்களின் கால்களை முறித்தார்கள். கள்வர்கள் மேல் நோக்கி நகர்ந்து நன்றாக மூச்சு வாங்க முடியாதபடியும், எனவே விரைவில் மரணமடையும்படிக்கும் அப்படிச் செய்தார்கள். ஆயினும் இயேசுவிடம் அவர்கள் வந்தபோது, அவர் ஏற்கெனவே மரணமடைந்திருந்தார். அவர் மரித்துவிட்டார் என்பதை உறுதிசெய்ய போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவரது விலாவிலே குத்தினான். தண்ணீரும் இரத்தமும் உடனே வெளிப்பட்டு அவர் மாரடைப்பால் மரித்து விட்டதை தெளிவுபடுத்தின.

யானைத் தந்த சிங்காசனத்தில் அவர் ஆளவில்லை,
   கல்வாரிச் சிலுவையில் அவர் மரித்தார்;
பாவிகளுக்காக தனது உடைமைகளை நஷ்டமாய் எண்ணினார்,
   சிலுவையிலிருந்தபடி தமது இராஜ்யத்தை அளவிட்டார்.
ஒரு அழகற்ற சிலுவை அவரது சிங்காசனமானது,
   அவரது இராஜ்யம் இருதயங்களில் மட்டுமே;
இரத்தச் சிவப்பில் தமது அன்பை வரைந்தார்,
   தமது தலையில் முட்களைச் சூடிக் கொண்டார்.
(“முள்ளாலான ஒரு கிரீடம்” by ஐரா F. ஸ்டான்ஃபில், 1914-1993).

ஆனால் சற்றும் எதிர்பாராத ஒன்று அப்போது நடந்தது. இரு பிரபலமான மனிதர்கள் இயேசுவின் சரீரத்தைக் கேட்டார்கள். அவர்களில் ஒருவன் ஐசுவரியவானும் யூத சனகெரிம் மாமன்ற உறுப்பினருமான அரிமத்தியா ஊர் யோசேப்பு. இன்னொருவன், முன்பு இராக்காலத்தில் இயேசுவிடம் வந்து சென்ற நிக்கொதேமு எனப்படும் யூதத் தலைவன் (யோவான் 3:1-2). இதுவரை இயேசுவின் இரகசிய சீஷர்களாயிருந்த இவர்கள், முதல் முறையாக இப்போது தங்களது விசுவாசத்தை வெளிப்படையாய் காண்பித்தனர். தங்களது உயிரைப் பணயம் வைத்து அவ்வாறு செய்தனர். பண்டிதர் மக்கீ சொல்கிறார்:

இவ்விருவரையும் நாம் மோசமாக விமர்சிக்க வேண்டாம். புpன்னணியில் இவர்கள் சீஷராயிருந்து வந்தனர். ஆண்டவரது சீஷர்கள் ஆடுகளைப் போல இப்போது சிதறிப்போன போது, இவ்விரு மனிதரும் தங்களை வெளிச்சத்தில் நிறுத்தினர். (J. வெர்னான் மக்கீ, Th.D., வேதாகமத்தின் ஊடாக பயணத்தில், தாமஸ் நெல்சன் வெளியீடு, 1983, பகுதி IV, பக்கம் 494).

இயேசுவானவரின் சரீரத்தை அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பும் நிக்கொதேமுவும் எடுத்துச் சென்றனர். ஐசுவரிவானாயிருந்த யோசேப்பு ஒரு புதிய கல்லறையில் இயேசுவானவரின் சரீரத்தை வைத்தான்.

“தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை அவத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டி வைத்துப் போனான்” (மத்தேயு 27:60).

இவ்வாறாக கிறிஸ்துவினது அடக்கத்தின் முரண்பாடு விளக்கப்படுகிறது. ஆம், சிலுவையில் அவர் மரிக்கும்போது இரு கள்வரின் நடுவே, தமது கல்லறையை துன்மார்க்கரோடே பெற்றிருந்தார். எனினும் அடக்கம் பண்ணப்படும்போது பணக்காரனின் கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டார் (ஏசாயா 53:9). ஒரு பொல்லாதவனைப் போல மரித்த கிறிஸ்துவானவர் ஐசுவரியவானோடே கனம் மிக்க விதமாய் அடக்கம் பண்ணப்பட்டார். நமது ஆண்டவரின் சிறுமைபடுதல் முடிந்து போனதை இது காண்பிக்கிறது. பொதுவான கல்லறையில் இரு கள்வரைப்போல அவரது சரீரம் தூக்கி எறியப்படவில்லை. அவருக்குப் பொருத்தமான மிகுந்த மரியாதையோடும் பயபக்தியோடும் ஒரு பணக்கார பெரிய மனிதனின் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த முரண்பாடு பண்டைக் கால யூத மத ரபிகளை மிகவும் குழப்பியது, நமக்கோ இவ்வசனம் தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது.

“துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்” (ஏசாயா 53:9).

கிறிஸ்துவானவர் தனது கல்லறையை ஐசுவரியவானோடு வைத்துக் கொண்டதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. நான் ஏற்கெனவே கூறியபடி, யூத சமுதாயம் கொடுஞ்செயல் புரிவோரையும் சட்டத்தை மீறுகிறவர்களையும் துன்மார்க்கராகவும், ஐசுவரியவான்களைக் கனமான மக்களாகவும் பார்த்தது. இந்த இரு குழுவினரோடும் இயேசுவானவர் தமது கல்லறையைப் பகிர்ந்து கொண்டதன் மூலம், பாரம்பரிய யூத ரபிமார்கள் துன்மார்க்கரெனவும் ஐசுவரியவான்கள் எனவும் பிரிப்பது தவறு என நிரூபிக்கப்பட்டுவிட்டது. அவர்கள் இரு பிரிவினர் அல்லர். இரு பிரிவினருமே பாவிகள்!

அது இன்னும் அப்படித்தான். மதிப்புமிக்க மனிதரும் அவர்கள் 'துன்மார்க்கர்' என அழைப்போரைப் போல பாவிகளே. இந்தப் பிரசங்கத்தை நான் எழுதிக்கொண்டிருக்கையில் ஒரு விற்பனையாளர் என்னோடு தொலைபேசியில் பேசி 'பழமைப்பற்றுமிக்க' ஒரு ஊழியத்துக்கு நன்கொடை அளிக்குமாறு வேண்டினார். அவர் சொன்னார்: 'அமரிக்காவை எதிர்நோக்கியுள்ள மிக முக்கியமான பிரச்சனையாக பின்வருவனவற்றுள் எதை நீங்கள் கூறுவீர்கள் - கருக்கலைப்பு, இஸ்ரவேல் தேசத்தை ஆதரிக்க மறுப்பது அல்லது ஓரினச் சேர்க்கை திருமணம்?' நான், இது எதுவுமில்லை என்றேன். தங்களது திருச்சபையின் அங்கத்தினர்களது பாவத்தைக் குறித்து போதகர்கள் பிரசங்கியாமல் இருப்பதுதான் அமரிக்காவை எதிர்நோக்கியுள்ள மிகப் பெரிய பிரச்சனை. ஆதன் அர்த்தம் என்ன? இதன் அர்த்தமாவது, கருக்கலைப்பும், ஓரினச் சேர்கையும் இஸ்ரவேல் நாட்டை ஆதரிக்கத் தவறுவதும் அறிகுறிகள்தான், அவை உண்மையான நோயல்ல. வியாதியின் அறிகுறிகள்தான் அவை! அறிகுறிகளைக் குணமாக்க நீங்கள் முயலலாம். அவைகளைக் கொண்டுவரும் வியாதியைக் குணமாக்கவில்லையென்றால் பிரயோஜனமில்லை. உண்மையான வியாதி பாவமே. அது திறந்த மனப்பான்மையுள்ளோரையும் பழமைவாதிகளையும் அழித்துக் கொண்டிருக்கிறது; பாவமானது குடியரசுக் கட்சியினரையும் ஜனநாயகக் கட்சியினரையும் கொன்றுகொண்டிருக்கிறது. அது 'துன்மார்கரையும்' 'ஐசுவரியவான்களையும்' குழியில் தள்ளுகிறது.

பாவம் இருதயத்தில் தங்கியிருக்கிறது. மனிமனது வெளிப்புற கிரியைகள் மட்டுமல்ல, அவனது இருதயம் தவறானது. பாவம் மனிதனது உள்ளான நினைவுகளையும் விருப்பங்களையும் கட்டுப்படுத்துகிறது. பாவமானவற்றைச் சிந்திக்குமாறு பாவமுள்ள இருதயம் மனிதனைத் தூண்டிவிடுகிறது. பின்பு உங்களது பாவ சுபாவம் தேவனுக்கு விரோதமாக எழுப்பிவிட்டு, நீங்கள் சிந்தித்த பாவத்தைச் செய்ய வைக்கிறது. பாவம் உங்களது உள்ளான வாழ்வை ஆட்டிப் படைத்து, அதிகாரத்திற்கெதிராகவும் தேவனுக்கெதிராகவும் உங்களைச் செயல்பட வைக்கிறது. அதை மாற்றவோ அதன் கட்டுப்பாட்டை முறிக்கவோ கூடாதபடிக்கு தேவனுக்கெதிரான பாவச் செயல்பாடு மிகவும் வல்லமையுடையதாயிருக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் புலம்புவதைப் போன்ற ஒரு நிலைக்கு நீங்கள் வந்துவிடுவீர்கள், 'நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரண சரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?' (ரோமர் 7:24). அப்பொழுதுதான் இயேசுவானவர் துன்மார்க்கரோடும் ஐசுவரியவான்களோடும் தமது கல்லறையைப் பெற்றிருந்ததன் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். நீங்கள் எப்படிப்பட்ட பின்னணியத்தை உடையவராயிருந்தாலும், உங்களது பாவங்கள் மன்னிக்கப்பட்டு அகற்றப்படும்படியாக கிறிஸ்து மரித்தார். பண்டிதர் J. வில்பர் ச்சாப்மேன் தனது கவிதையில் குறிப்பிடுகிறார், 'அடக்கம் பண்ணப்பட்ட அவர் எனது பாவத்தை மிகுந்த தூரமாய் விலக்கினார்' (பண்டிதர் J. வில்பர் ச்சாப்மேன், 1859-1918 எழுதிய 'ஒரு நாள்'). கிறிஸ்துவானவர் ஒருவர் மட்டுமே உங்களது எதிர்த்துச் செல்லும் சுபாவமுடைய இருதயத்தை மாற்ற முடியும்!

“துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்” (ஏசாயா 53:9).

II. இரண்டாவதாக, முரண்பாடு விளக்கப்படுகிறது.

மதிப்புக் குறைவான விதத்தில் கள்வர்களோடு கிறிஸ்துவானவர் மரித்தபோதிலும் மரியாதையோடும் மதிப்போடும் அவர் ஏன் அடக்கம் செய்யப்பட்டார் என்பதை நமது வேத பகுதியின் பின்பகுதி காண்பிக்கிறது. தயவுசெய்து எழுந்து நின்று, 'அவர் கொடுமை செய்யவில்லை' (ஏசாயா 53:9) என்பதில் தொடங்கி, நமது வேத வசன பகுதியை வாசியுங்கள்.

“துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை, அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை” (ஏசாயா 53:9).

இப்போது நீங்கள் அமரலாம்.

இயேசுவானவர் கனத்தோடு அடக்கம் பண்ணப்பட்டதற்கான காரணத்தை இது அளிக்கிறது. இந்த மரியாதை அவருக்கு ஏன் தகுதியானதென்றால் அவர் எந்தக் கொடுமையும் செய்யவில்லை, அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை. அவர் யாரையும் காயப்படுத்தவில்லை. ஒடுக்குதல், திருட்டு, கொலை அல்லது எவ்விதக் கொடுமையிலும் அவர் குற்றவாளியல்ல. அவர் எந்த புரட்சியிலும் ஒருபோதும் ஈடுபடவில்லை. ரோம அல்லது யூத அரசாங்கங்களுக்கு எதிரான எந்தக் கலவரத்திலும் அவர் பங்கேற்கவில்லை. அவர் வாயில் ஒரு வஞ்சனையும் இருந்ததில்லை. அவர் எந்த துர்உபதேசத்தையும் போதிக்கவில்லை. அவர் மீது குற்றம் சாட்டியபடி, எந்த மக்களையும் அவர் ஏமாற்றவில்லை. அது ஒரு மொட்டை பொய். தேவனை உண்மையாய் ஆராதிப்பதை அவர் ஒருபோதும் தடுக்கவில்லை. மோசேயின் நியாயப்பிரமாணத்தையும் தீர்க்கதரிசிகளையும் அவர் எப்போதும் மதித்து, உயர்த்திக் காட்டினார். அவர்களது சமயத்திற்கோ தேசத்திற்கோ அவர் ஒருபோதும் எதிரியல்ல. உண்மையில், அவர் மீது எந்தப் பாவமும் இல்லை. அப்போஸ்தலனாகிய பேதுருவும் கிறிஸ்துவானவர்,

“பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை” (I பேதுரு 2:22).

என்று கூறுகிறார்

பண்டிதர் யெங் சொன்னார், “கிறிஸ்துவானவர் முற்றிலும் மாசற்றவராயிருந்தபடியால், மதிப்பற்ற மரணத்தைச் சந்தித்ததற்குப் பின் பெருமை மிக்க அடக்கத்தைக் பெற்றுக் கொண்டார். அவரோடு சிலுவையிலறையப்பட்ட தீயவர்களைப்போல அவர் இராதபடியால், அவர்களைப்போல் இகழ்ச்சியான இடம் அவருக்குக் கிடைக்காமல், ஐசுவரியவான்களோடு ஒரு மரியாதைமிக்க அடக்கம் அவருக்குக் கிடைத்தது.”

இந்த இடத்தில் மதிப்புமிக்க வின்ஸ்டன் சர்ச்சிலை நான் நினைத்துப் பார்க்கிறேன். அவரது மற்றும் அவரின் தகப்பனாரின் எதிரிகள் மிகுந்த ஆரவாரத்தோடும் நடன நாட்டியத்தோடும் எடுத்துச் செல்லப்பட்டு புதைக்கப்பட்ட பாரம்பரியப் புகழ்மிக்க வெஸ்ட்மின்ஸ்டர் அப்பேயில் தான் அடக்கம் செய்யப்படுவதை தரம் தாழ்ந்ததாக நினைத்த அவர், தனது தகப்பனாரின் கல்லறையருகே ஒரு கிராமப்புற ஆலய வளாகத்தில் தானும் அடக்கம் பண்ணப்படுவதை மேன்மையாக எண்ணினார். அவரது எதிரிகள் ஹிட்லரின் கொடுமை ஆட்சியை வஞ்சகமாக ஏற்றுக்கொண்டு அதற்கு ஒத்துழைத்தவர்கள். சர்ச்சில் மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர் இல்லையென்றாலும் அவர் ஒரு கனம் பெற்ற மனிதர்.

மனிதர்கள் யாவரிலும் தலைசிறந்தவர் இயேசுவே. அவர் மனிதராயிருந்தார், மனிதராயிருக்கிறார் 'மனுஷனாகிய கிறிஸ்து அவரே' (I திமோத்தேயு 2:5). பிதாவாகிய தேவனுக்கு முன்பாக தாமாக முன்வந்து நமது பாவங்களைப் போக்கும்படி தமது ஜீவனைக் கொடுத்தார் என்பதில்தான் அவரது மகத்துவம் விளங்குகிறது. தாம் சிலுவையில் அறைப்படுவதற்கு சற்று முன்பு இயேசு சொன்னார்,

“ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” (யோவான் 15:13).

ஒரு கரடுமுரடான சிலுவை அவரது சிங்காசனம்,
   அவரது இராஜ்யம் இதயங்களில் மட்டும்;
இரத்தச் சிவப்பில் தமது அன்பை எழுதினார்,
   தமது சிரசில் முட்கிரீடத்தை அணிந்தார்.

இப்போதும் நண்பனே, கிறிஸ்து என்றழைக்கப்பட்ட இயேசுவை என்ன செய்யப் போகிறீர்கள்? C. S. லீவிஸ் எழுதியுள்ளபடி இக்கேள்விக்கு இரு பதில்கள் மட்டுமே உண்டு: 'அவரை பிசாசாக எண்ணி காறித் துப்பலாம், கொன்றுவிடலாம். அல்லது அவரது பாதத்தில் விழுந்து, அவரை ஆண்டவரே, தேவனே என அழைக்கலாம்.' இதில் எதை நீங்கள் செய்வீர்கள்? இருக்கக்கூடிய மூன்றாவதான மாறுத்தரம் என்னவென்றால், அவரது வேதனையும் பாடுகளும் பயனற்றவை எனக் கூறி அவரைப் புறக்கணித்துவிட்டு மனம் போல வாழலாம். இயேசுவானவரை மரியாதைக் குறைவாக நடத்துபவர்களைக் குறித்து நான் அதிக துக்கப்படுகிறேன். நீங்கள் அவர்களில் ஒருவராக இருக்கக் கூடாதென நான் ஜெபிக்கிறேன். இப்படிப்பட்டவர்களை T. S. எலியட், 'பொருளற்ற வெற்று மனிதர்கள்' என அழைக்கிறார் - உடனடியாக அனுபவிக்கக்கூடிய சிற்றின்பங்களுக்காக மட்டும் வாழ்பவர்கள் இவர்கள். ஆம், இவர்களில் ஒருவராக நீங்கள் இருக்கக்கூடாதென நான் ஜெபிக்கிறேன், எனெனில் இவர்கள் நரகத்தின் படுகழியில் தள்ளப்படுவார்கள்.

கெத்செமெனேயை நான் மறப்பேனோ;
   உமது கடும் வேதனையை மறப்பேனோ;
என் மீதான உமதன்பை நான் மறப்பேனோ,
   கல்வாரிக்கு என்னை அழைத்துச் செல்லும்.
(“கல்வாரிக்கு என்னை நடத்திடும்” ஜென்னி E. ஹஸ்ஸி, 1874-1958).

நீங்கள் இயேசுவானவரிடத்தில் வந்து, முழு மனதோடு அவரை விசுவாசித்து, உண்மையான கிறிஸ்தவ மன மாற்றத்தின் மூலம் மரணத்துக்கு நீங்கலாகும்படி உங்களுக்காக நான் ஜெபிக்கிறேன்.

நாம் அனைவரும் எழுந்து நிற்போம். உங்களது பாவத்திலிருந்து இயேசுவானவரால் கழுவப்பட வேண்டுமென நீங்கள் விரும்பினால் இந்த மேடைக்குப் பின் இப்போதே வாருங்கள். நன்றாக உறையாடும்படியாய் பண்டிதர் கேகன் ஒரு அமைதியான இடத்திற்கு உங்களை அழைத்துச் செல்லுவார். திரு லீ அவர்களே, ஒப்புக்கொடுத்து முன்னே வந்தவர்களுக்காக ஜெபம் பண்ண வாருங்கள்.

இந்தப் பிரசங்கம் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்ததானால், டாக்டர் ஹைமர் அவர்களுக்கு e-mail அனுப்புங்கள். அவர் உங்களிடமிருந்து பதிலைப் பெற விரும்புகிறார். நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென்றும் குறிப்பிடவேண்டும். டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் e-mail: rlhymersjr@sbcglobal.net (click here). டாக்டர் ஹைமர்ஸ் அவர்களுக்கு நீங்கள் எந்த மொழியிலும் எழுதலாம். ஆனால், முடிந்தால் ஆங்கிலத்தில் எழுதவும். தபால் மூலம் அனுப்பவிரும்பினால், அவரது விலாசம்: Dr. Hymers P.O. Box 15308, Los Angeles, CA 90015. நீங்கள் அவரிடம் தொலைபேசி மூலமும் தொடர்பு கொள்ளலாம்: (818) 352-0452.

(பிரசங்கத்தின் முடிவு)
டாக்டர் ஹைமர்ஸ் அவர்களின் பிரசங்கங்களை Internet மூலம் ஒவ்வொரு
வாரமும் கேட்கலாம்: www.sermonsfortheworld.com.
தமிழ்ப் பிரசங்கங்களுக்கு இங்கே கிளிக் பண்ணவும்

இந்தப் பிரசங்கங்களைப் பயன்படுத்த Dr. Hymers அவர்களின் அனுமதி
பெற வேண்டியதில்லை. அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தலாம். ஆனால்,
Dr. Hymers அவர்களின் video செய்திகளை அனுமதி இல்லாமல்
பயன்படுத்தக்கூடாது.

பிரசங்கத்திற்கு முன் வேதபகுதியான ஏசாயா 53:1-9ஐ பண்டிதர் க்ரெய்ட்டன் L. ச்சேன் வாசித்தார்.
பிரசங்கத்திற்கு முன் 'முள்ளாலான ஒரு கிரீடம்' (ஐரா F. ஸ்டான்ஃபில் 1914-1993) /
 “கல்வாரிக்கு என்னை நடத்திடும்” (ஜென்னி E. ஹஸ்ஸி, 1874-1958) என்ற தனிப் பாடலை திரு பெஞ்சமின் கின்கெய்டு க்ரிஃபித் பாடினார்.


முக்கிய குறிப்புகள்

கிறிஸ்துவின் அடக்கத்தின் முரண்பாடு

(பிரசங்க எண் 10 ஏசாயா 53ன் மீதானது)
THE PARADOX OF CHRIST’S BURIAL
(SERMON NUMBER 10 ON ISAIAH 53)

அறிவர் R. L. ஹைமர்ஸ் ஜுனியர் அவர்களால்

“துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை, அவரது வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை” (ஏசாயா 53:9).

(I கொரிந்தியர் 15:3-4; யோவான் 17:3; ரோமர் 6:4)

I.    முதலாவதாக, அவரது அடக்கத்தின் முரண்படு மெய்மை,
ஏசாயா 53:9a; யோவான் 19:31; மத்தேயு 27:60; ரோமர் 7:24.

II.  இரண்டாவதாக, முரண்பாடு விளக்கப்படுகிறது, ஏசாயா 53:9b;
I பேதுரு 2:22; I திமோத்தேயு 2:5; யோவான் 15:13.